photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஜனவரி 30 :
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏடிஜயூசி சங்கம் சார்பில் இன்று 30-1-2026 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை, சம்பள தாமதம், காரணமின்றி பணிநீக்கம் போன்ற செயல்களில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் தூய்மை பணியாளர்கள் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அமைச்சரும் மேயரும் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும், ஒப்பந்ததாரர் இதுவரை 6 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஏடிஜயூசி சங்க மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் 6 அம்ச கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பாக தோழர் பொன்ராஜை பணிநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அந்த பணிநீக்கம் உடனே ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்” என்றார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் போது, தோழர் பொன்ராஜின் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் அமைதியாக நிறைவடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏடிஜயூசி சங்கரபாண்டியன், புரட்சி பாரதம், மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், சகாயம், மின்னல் அம்ஜத் உள்ளிட்டோர் மற்றும் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக