தூத்துக்குடி, அக்டோபர் 22 - தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை NH138-ல் இன்று காலை பொட்டலூரணி கிராம மக்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து முடங்கியது.
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை 8.30 மணி அளவில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
தூத்துக்குடி-திருநெல்வேலி, திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் இடைநில்லா பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை முயற்சி
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினரும், காவல்துறையினரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் கிராம மக்கள் "போக்குவரத்து துறையின் மண்டல மேலாளரிடம் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்.
பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில், போக்குவரத்தை சீரமைக்க காவல்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட கிராம மக்களை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக