தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளி – 141 ஆவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் 141 ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சவேரியானா இல்ல அதிபர் அருள்திரு. சிங்கராயர் சே.ச. தலைமை தாங்கினார். தாளாளர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. மற்றும் தலைமையாசிரியர் அருள்திரு. அமல்ராஜ் சே.ச. முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை தாரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் தனசேகரன் (MBBS., DTCD) கலந்து கொண்டு, தன் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்ததோடு, “கல்வியே வாழ்க்கையில் உயர்வுக்கு அடிப்படை” என சிறப்புரை ஆற்றினார்.
11 ஆம் வகுப்புக்கான திறனறித் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற விஷ்ணு உள்ளிட்ட, வகுப்பு வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியர் நெய்தல் அண்டோ பள்ளி நிர்வாகத்தினரால் பாராட்டப் பெற்றார்.
பள்ளியின் ஆண்டறிக்கையைத் தலைமையாசிரியர் அமல்ராஜ் சே.ச., தாளாளர் பிரான்சிஸ் சேவியர் சே.ச., உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா ஆகியோர் வாசித்தனர். “அறிவை விரிவாக்கு” என்ற மையக் கருத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
மாணவர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என சுமார் 3,000 பேர் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்று, உதவித் தலைமையாசிரியர் அருள்திரு. இருதய வளனரசு சே.ச. நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவர்கள் வளன், ஆரோக்கிய கிராசியோ, நித்திஸ் ராஜ் தொகுத்து வழங்கினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக