தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி | 27.05.2025
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழிப்பறி வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-3 இன்று (27.05.2025) தீர்ப்பு வழங்கியது.
கடந்த 22.02.2024 அன்று கோரம்பள்ளம் பகுதியில், சாலையில் சென்ற பெண் ஒருவரிடம் தங்கச் செயினை பறித்து தப்பியோடிய சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (எ) ராஜா மகன் பின்லேடன் (22), மற்றும் மணப்பாடு மீனவர்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மகன் மரிய யோஸ்வின் (எ) யோசுவா (22) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை, நடுவர் நீதிமன்றம் எண்-3ல் நடைபெற்றது. வழக்கினை விசாரித்த கனம் நீதிபதி விஜயராஜ்குமார் அவர்கள், இரண்டு பேரும் குற்றவாளிகள் எனக் கருதி தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் ராமேஸ்வரி, சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் வாதித்த முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பாராட்டினார்.
விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் திரு. செல்வராஜ் என்பவரும் பாராட்டு பெற்றுள்ளார்.
– தூத்துக்குடி லீக்ஸ் செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக