Tamil Nadu updates,
Photo news by Arunan journalist
தூத்துக்குடி, ஏப்ரல் 2:
தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (02.04.2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 31 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
மச்சாது நகர் குடியிருப்பாளர்களின் கோரிக்கை
இந்த முகாமில் 2வது வார்டு பொதுமக்கள் சார்பில் மனு எண் 14 மூலம் மச்சாது நகரில் கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகடாமி அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களது குறைகளை முன்வைத்தனர்.
குடியிருப்பாளர்கள் தங்கள் மனுவில், ...
அப்பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்குவதால் மூன்று முதல் நான்கு மாதங்கள் வீடுகளை காலி செய்து வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இந்த பிரச்சினை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்களது குடியிருப்புக்கு செல்லும் பிரதான சாலையில் தெருவிளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பகுதி குடியிருப்பாளர்கள் தாங்கள் மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருவதாகவும், அதனால் தங்கள் பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, தண்ணீர் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, குறைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக