புதன், 2 ஏப்ரல், 2025

திருநங்கைகளுக்கான கிரிமா கிரஹ் இல்லங்கள்: கனிமொழி கருணாநிதி எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில்

 Tamil Nadu updates,2-4-2025

Photo news by Arunan journalist 

# திருநங்கைகளுக்கான கிரிமா கிரஹ் இல்லங்கள்: கனிமொழி கருணாநிதி எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார் 


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி, ஏப்ரல் 2: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் 'விளிம்பு நிலை மனிதர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (SMILE) கீழ் நாடு முழுவதும் திருநங்கைகளுக்கான 'கரிமா கிரஹ்' இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இணையமைச்சர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார்.



திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 429 திருநங்கைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மாநில அடிப்படையில் மகாராஷ்டிராவில் 3, மேற்கு வங்காளத்தில் 2 இல்லங்களும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தலா ஒரு இல்லமும் செயல்படுகிறது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 20 திருநங்கைகள் தங்கியுள்ளனர்.


இந்த இல்லங்களில் திருநங்கைகளுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு, யோகா, தியானம், விளையாட்டுகள், நூலக சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


இதுவரை SMILE திட்டத்தின் கீழ் இல்லங்களுக்காக ரூ.6.8 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக இணையமைச்சர் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு இல்லத்திலும் வசிப்பவர்களின் மனநலத்திற்காக தனி ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்றிய சுகாதாரத் துறையின் 'Tele MANAS' திட்டத்தின் கீழ் 24 மணி நேர உதவி எண் (14416) வழியாகவும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.


மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மூலமாக SMILE திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் திருநங்கைகள் சமூகத்தினரிடையே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக