Tamil Nadu updates photo news by Arunan journalist 19-3-2025
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 19) பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி., மன்னார் வளைகுடாவில் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள கடல்சார் ஆழ்துளை நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஹைட்ரோகார்பன் ஏல திட்டம்:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், 2025, பிப்ரவரி 11 அன்று, OALP- ஏல சுற்று-10 மூலம் புதிய எரிவாயு மற்றும் பெட்ரோலிய வளங்களை ஏலம் விட அறிவித்தது. இதில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் பாக் விரிகுடா உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்பு:
மன்னார் வளைகுடா பகுதி பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், தீவுகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளால் வளமானது. இது 560 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த ஏல திட்டம், இந்தியாவின் முதல் டுகோங் (கடல் பசு) பாதுகாப்பு காப்பகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல்:
மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக கொண்டுள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு இந்த ஆழ்துளை திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்சார் அகழ்வுப் பணிகள் கடல் உயிரினங்கள், மீன் கூட்டங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு:
மாநில அரசிடம் ஆலோசனை கூட செய்யாமல் இந்த ஏலத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 4-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கோரிக்கை:
“மன்னார் வளைகுடா போன்ற பல்லுயிர் வளம் மிக்க பகுதிகளை OALP ஏலத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும். சுற்றுச்சூழலும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என கனிமொழி கருணாநிதி எம்.பி. வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக