சனி, 11 ஜனவரி, 2025

திமுக அரசு மீது எச்சரிக்கை? பழைய ஓய்வூதியத்திற்கு பதிலாக புதிய திட்டம்: தலைமைச் செயலக சங்கம் கடும் எதிர்ப்பு

பழைய ஓய்வூதியத்திற்கு பதிலாக புதிய திட்டம்: தலைமைச் செயலக சங்கம் கடும் எதிர்ப்பு

Tamil Nadu updates,12-1-2025

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ், ஜன. 24-


பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


"2021 சட்டமன்றத் தேர்தலின்போது வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்பதை 2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 


அரசின் கொள்கை முடிவு!!!

இது மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு இல்லை என்றாலும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதால் அரசின் கொள்கை முடிவாகவே கருத வேண்டியுள்ளது.


கடந்த நான்கு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்து வந்தாலும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.


ஒன்றிய அரசின் குழு மற்றும் ஆந்திர அரசின் குழு அறிக்கைகளை காத்திருந்த பின், இப்போது வழிகாட்டு நெறிமுறைகளுக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். 


அதன் பிறகும் புதிய குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கே நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜெ... காலத்தில்...!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. 


பின்னர்  ஸ்ரீதர் தலைமையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, பெரும் போராட்டங்களுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


 ஆனால் வெளிப்படைத்தன்மை பேசும் திராவிட மாடல் அரசு இன்றுவரை அந்த அறிக்கையை பொதுவெளியில் வைக்கவில்லை.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை பணிஓய்வு, இறப்பு, பணித்துறப்பு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றால் வெளியேறிய சுமார் 40,000 பணியாளர்களுக்கு ஒரு பைசா கூட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

கலைஞர் ஆட்சியில்...

முன்னாள் முதல்வர் கலைஞர் அமல்படுத்திய சரண் விடுப்பு உரிமையும் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது.


 அதுமட்டுமின்றி, 2021-ல் இருந்த 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படாமல் உள்ளன. 


சீர் குலைப்பு !!!

குறிப்பாக குரூப் டி பணியிடங்கள் அவுட்சோர்சிங், கான்டிராக்ட், கன்சல்டன்சி என்ற பெயரில் நிரப்பப்படுவதால் 69 சதவீத இடஒதுக்கீடு சீர்குலைக்கப்பட்டுள்ளது."

கூட்டம் அறிவிப்பு!!!

இந்நிலையில், நிதியமைச்சரின் அறிவிப்பை கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட்டம், சரண் விடுப்பு வழங்குதல், காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வரும் 24.01.2025 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் சங்கத்தின் சார்பில் உணவு இடைவேளை கூட்டம் நடைபெறவுள்ளது.

எச்சரிக்கை?!!

"சிலரை சில நேரங்களில் ஏமாற்றலாம்; பலரை பல நாட்களில் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது" என்ற ஆபிரகாம் லிங்கனின் வாசகத்தை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறக்க மாட்டார்கள் என சங்கம் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக