வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

தூத்துக்குடியில் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கொலை மிரட்டல் சென்னை தொழிலதிபர் கைது ரூபாய் 1 கோடியை கடன் பெற்று மோசடி காவல்துறை அதிரடி நடவடிக்கை

 தூத்துக்குடி மாவட்டம் : 10.02.2023.

by.Police news 

தூத்துக்குடி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற ரூபாய் 1 கோடியை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த சென்னையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன உரிமையாளர் கைது - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

இது பற்றிய செய்தியாவது:-


சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (56) என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 30.05.2018 தேதியிட்ட மேற்படி காசோலை மூலம் ரூபாய் 40 லட்சமும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூபாய் 20 லட்சமும் ஆக மொத்தம் ரூபாய் 60 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டார்கள்.


அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுப்பத்திரம் அசல் ஆகியவற்றை அடமானமாக கொடுத்துள்ளனர்

கைதான தொழிலதிபர் சிவசங்கர் 


இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01.2020 தேதியிட்ட உறுதிமொழிப்பத்திரத்தையும் மீண்டும் அடமானமாக கொடுத்துள்ளார்.


பின் சிவசங்கர் மேற்படி பைனான்ஸ் நிறுவனத்தினரிடம், தங்களால் கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றும், தாங்கள் அடமானம் வைத்த கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தை திருப்பித்தந்தால் அந்த காட்டேஜை விற்று பணத்தை தந்து விடுவதாக நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து அசல் ஆவணத்தை வாங்கிக் கொண்டு 20.01.2020 அன்று கொடைக்கானல் காட்டேஜை ரூபாய் 2 கோடிக்கு விற்பனை செய்து, பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்து, ரூபாய் 1,08,61,020/-க்கு காசோலைகள் கொடுத்துவிட்டு, காசோலையை பணமாக்கவிடாமல், மேற்படி காசோலைகள் தொலைந்துவிட்டதென்று அவரது வங்கிக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் (Stop Payment) என்று தெரிவித்து மோசடி செய்துள்ளார். 


மேலும் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பைனான்ஸ் நிறுவனத்தினரை கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.


இதுகுறித்து ராஜம் பைனான்ஸ் கம்பெனி மேலாளர் பிரபாகரன் என்பவர்; கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் , மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் அவர்களுக்கு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். 


இந்நிலையில் தனி அலுவலாக ஏற்கனவே சென்னை சென்றிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார்,  மோகன் ஜோதி ஆகியோர் மேற்படி சிவசங்கருக்கு குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி அழைப்பாணை சார்பு செய்து நேற்று (09.02.2023) தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (10.02.2023) பேரூரணி சிறையிலடைத்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக