செவ்வாய், 3 மே, 2022

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு சம்பவ இடத்திற்கு கலெக்டர் எஸ்.பி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு இறந்தவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறினர்.

இதுபற்றிய செய்தியாவது:-

       தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராமன் (52) என்பவர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது  மனைவி  காளியம்மாள்(47) மற்றும் தாயார் காத்தம்மாள் (72) ஆகியோருடன் அண்ணாநகர் 3வது தெருவில் தனது வீட்டில் வசித்து வருகிறார். முத்துராமன் தம்பதியினரின் ஒரே மகளான காத்தம்மாள் (எ) கார்த்திகா (21) என்பவருக்கு திருமணமாகி  9-மாத கர்ப்பிணியான இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடத்தி அண்ணாநகரில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.






இந்நிலையில் நேற்று (02.05.2022) இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண்ணான காத்தம்மாள் (எ) கார்த்திகா, தாய் காளிம்மாள் மற்றும் தந்தை முத்துராமன் ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். வீட்டின் வெளியே தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனின் தாயார் காத்தம்மாள் (72) என்பவர் இதனைக் கண்டு அருகிலுள்ளோரை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து அருகிலுள்ளவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் முத்துகணேஷ், கதிரேசன் உட்பட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காத்தம்மாள் (எ) கார்த்திகா மற்றும் அவரது தாயார் காளியம்மாள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டது. 


மேலும் காயமடைந்த முத்துராமனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர்  கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மேற்படி முத்துராமனின் தாயார் காத்தம்மாள் என்பவருக்கு ஆறுதல் கூறினர்.



இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக