பிஜேபி ஆதரவாளரும் யூ டியூபருமான மாரிதாஸ் என்பவர் மதுரையில் கைது. சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவுசெய்ததையடுத்து காவல்துறை அவர் மீது 153 A, 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவான பிறகு சர்ச்சைக்குரிய ட்வீட்டை அவர் நீக்கியுள்ளார்.
தமிழகத்தில் போகிற போக்கில் அவதூறுகளை அள்ளிவீசிவிட்டு அரசியலுக்குள் அடைக்கலம் புகுவார்கள்
தமிழக அரசியல் களம் பார்க்காத விமர்சனங்கள் இல்லை. சந்திக்காத அவதூறுகள் இல்லை. ஆனால் புரட்டுகளையும் பொய்யையும் மட்டுமே பேசுவதை முழுநேரமாகக் கொண்ட அரசியல்வாதிகளை தமிழகம் ஏற்றுக் கொண்டது இல்லை.
அண்மைக்காலமாக இத்தகைய அநாகரீகப் போக்கு அங்கிங்கெனாதபடி தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.
சமீபகாலமாக சிலர் அதுவும் ஒரு வெள்ளை போர்டு வைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் ஏதோ அரிய கண்டுபிடிப்பு ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வந்தார்... மாரிதாஸ் என்கிற யூடியூபர்.
தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், திமுக மீது இடைவிடாத அவதூறுகளை அள்ளி வீசிவிட்டு அசால்ட்டாக போய்க் கொண்டிருந்த மாரிதாஸ்தான் இப்போது கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்
பாகிஸ்தானிடம் பணம் பெறும் திமுக "விதி எண் 370 நீக்கம் குறித்து திமுகவினரின் நிலைப்பாடு ஹிஜ்புல் முஜாகிதின்,லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கர வாத அமைப்புக்களுக்கு ஆதரவாக உள்ளது. திமுக பயங்கரவாதிகள் மற்றும் குற்றம் புரிவோருக்கு ஆதரவு அளிக்கிறது. திமுக இதற்காகப் பாகிஸ்தானில் இருந்து பணம் பெறுகிறதா அல்லது பயங்கரவாத அமைப்புக்களுடன் புரிந்துணர்வு அடிப்படையில் அறிக்கைகளை திமுக வெளியிடுகிறதா?"
பாகிஸ்தான் - திமுக உறவு "திமுகவின் போராட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கமாக கருதப்படும் ரேடியோ சேனல் மற்றும் டெய்லி பாகிஸ்தான் ஏன் ஆதரவு தெரிவிக்கின்றன.? டெய்லி பாகிஸ்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அனைத்து செய்திகளையும் வெளியிட்டுள்ளது. தி,க., திமுகவுக்கு ஆதரவாக டெய்லி பாகிஸ்தான் செய்தி வெளியிடுகிறது"
இஸ்ரோ-திமுக "பாகிஸ்தான் - திமுக இரண்டு கூட்டம் தான் இஸ்ரோ தோல்வியைச் சந்தோசமாகக் கொண்டாடுகிறார்கள். திமுக ஸ்டாலின் அந்த பக்கம் ஆதரவாகப் பேசுவது போல் இந்த பக்கம் தன் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுள்ளார் கேலி செய்ய என்று தோன்றுகிறது. மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி இஸ்ரோ ஆய்வாளர்கள் பக்கம் நிற்கவும் - இந்த தேசத்தை அவமானம் செய்த திமுக ஆதரவாளர்கள் சமீபத்தில் பெற்ற வெற்றி மமதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர்"
திமுக ஆட்சியை கலைக்கனும் "திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் இறங்கியுள்ளார். சட்டத்தை பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியைக் கலைப்பது தான் சரி" இத்துடன் முடியவில்லை... மாரிதாஸின் அவதூறுகள் ஏராளமாக இருக்கின்றன.
இதன் உச்சமாகத்தான் தமிழக அரசை விமர்சித்து போட்ட பதிவால் இப்போது கைதாகி இருக்கிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் முதுகுளத்தூரில் மாணவர் மணிகண்டன் இறந்ததைத் தொடர்ந்து, சாதிய மோதல்களுக்கு வித்திடும் வகையில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த மாரிதாஸ், காவல்துறைக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்து வந்தார்.
முற்றிலும் தவறான புள்ளி விவரங்களுடன், எல்.ஈ.டி திரைமுன் நின்றுக்கொண்டு, "புரிஞ்சுச்சா.. புரிஞ்சுச்சா..." என்று கேட்டு அபத்தமான செய்திகளை பரப்பி வந்த மாரிதாஸ் மதுரை கடைச்சநேந்தல் பகுதியில் வசித்து வந்தார்.
இவரது சமீபத்திய விமர்சனங்கள் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், தென்மாவட்டங்களில் மீண்டும் சாதி மோதல்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்து இருந்தது.
இந்நிலையில், "புரிஞ்சுச்சா.. புரிஞ்சுச்சா.." என்ற மாரிதாஸ்க்கு புரிய வைக்க, இந்திய தண்டனைச் சட்டம் குற்றப்பிரிவுகள் 153 ஏ, 505 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறையினர் சென்ற போது, மதுரையைச் சேர்ந்த பாஜக கட்சியினர் டாக்டர் சரவணன் தலைமையில் கூடி காவல்துறையினரின் நடவடிக்கை எடுக்க விடாது தடுக்க முயன்றனர்.
நீண்ட வாதத்துக்கு பின் காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடுயுபர் மாரிதாஸ் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்ததும் நீதிமன்றக் காவலுக்கு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
தொகுப்பு
10.12.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக