thoothukudileaks
இதுபற்றி மனுவில் கூறி இருந்த செய்தியாவது:-உச்சநீதி மன்றத்திலே, தமிழக அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கும் இடையிலான வழக்கு நடந்து வருகின்றது.
மூடிக்கிடக்கும் ஆலையை திறக்கவேண்டும் என்பது ஆலையின் வாதமாகவும், ஆலை சுற்றுச்சூழலை சீர்குலைத்தது, மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியது எனவே ஆலையை திறக்க முடியாது என்பது அரசு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் உட்பட அனைத்து தலையீட்டாளர்களின் வாதமாகவும் உள்ளது.
வழக்கின் தீர்ப்பு மூலம் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று பொறுமையோடும் நம்பிக்கையோடும் நாங்கள் காத்திருக்க, தற்பொழுது அந்த நச்சாலை சமூகசூழலையும் சீர்கெடுக்கும் தனது வழக்கமான பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் வயிற்று பசியிலும் பணப்பசியிலும் அலையும் நான்கைந்து நபர்களை பிடித்து பசிக்கு தீனி கொடுத்து, தாங்கள் தான் மக்களின் பிரதிநிதிகள் போல் பேச வைத்து மக்கள் ஆலையை திறக்கவே விரும்புகிறார்கள் என்பது போல பொய்யான தோற்றத்தை பரப்ப முயல்கிறார்கள்.
அதிலும் மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களாக தங்களை அடையாளங் காட்டி பேசும் போது, அது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அவமானப் படுத்துவதாகவும் கோபம் கொள்ளச் செய்வதாகவும் உள்ளது.
இப்பேர்பட்ட சூழ்நிலையில், தொடக்க முதல் இன்று வரை மிகத் திடமான உறுதிப்பாட்டோடு ஆலையை எதிர்த்து வரும் மீனவ சமுதாயம், ஒரு சில கைக்கூலிகளால் தங்களுக்கு ஏற்படும் களங்கத்தை போக்க, நடவடிக்கைக்குள் நிர்பந்திக்கப் படுகிறார்கள்.
இது உளவியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு மன சூழல்.
சில சமயங்களில் அது எதிர்வினையாற்றும் போக்குக்கு மக்களை கொண்டு நிறுத்தி விடக்கூடும்.
நாங்கள் நம் நகரில் இயல்பு வாழ்க்கைக்கு பங்கம் வராமல் வாழவே விரும்புகிறோம்.
ஆனால் இந்த குற்றக் கார்ப்பரேட்டும் அதன் கைக்கூலிகளும் எங்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கிறார்கள்.
மீனவ மக்கள் மட்டுமின்றி நகரின் அனைத்து மக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். எனவே, ஆலையின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சீண்டிவிடக்கூடிய "சந்து-பொந்து" செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வலியுறுத்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்
நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் காத்திருக்கிறோம்
இவ்வாறு தெரிவித்து இருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக