திமுக கழகத் தொண்டனின் கண்ணீர் கடிதம். தலைவர் ஏன் தோற்றுப் போனார்?
சில உண்மைகளையும் சில மூடநம்பிக்கைகளையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது. ஏனென்றால், பிரபஞ்சம் அப்படித்தான் இந்த உலகத்தை, இந்த மக்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.
வெளிப்படையான உண்மைகள்.
ஆனால், நாம் ஏற்றுக் கொள்ள தவறிய உண்மைகள்:
``தலைவர்கள் மாறலாம், தர்பார்கள் மாறலாம், தத்துவம் என்றும் அட்சய பாத்திரம்’’ என்று சொல்வார்கள். ஆனால், தத்துவம் எப்போதும் தோற்றுப் போனவர்களின் மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டது. உண்மையோ வேறு.
உண்மையில், இது பெரியார் மண் அல்ல, இது கலைஞர் மண்.
பெரியார் ஊறுகாய் போன்றவர். அண்ணா உப்பைப் போன்றவர்.
ஆனால், கலைஞரோ ஒரு விருந்தின் சோறு போன்றவர்.
சிறுபான்மையினர், கிறிஸ்தவர், இஸ்லாமிய பெண்கள், தலித்துகள், பெண்கள் (நான் சொல்வது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்) இவர்களில் பலர் எல்லோரும் அல்ல எப்போதுமே சந்தர்ப்பவாதிகள். ஆண் பொதுநலம், பெண் சுயநலம்.
இவர்களில் பலரும் நன்றிகெட்டுப் போய், நமக்கு வாக்களிக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஒரு வீட்டில், அப்பா பிள்ளையை `தற்குறி’ என்பான்
பிள்ளையோ.. அப்பாவை `அப்பா, அப்டேட் வெர்சனாக இல்லாத`பூமர்’ என்பான். இதுதான் இப்போது நடந்திருக்கிறது.
கோபால்சாமி வெளியேறியதோடு தி.மு.க.வின் கோபமும் வெளியேறிவிட்டது.
இளைஞர்களை நம் வயப்படுத்த நாம் தவறிவிட்டோம். அது கடந்த 35 ஆண்டுகளாக, கழகத்தில் தமிழ்நாட்டில் புரையோடிய புண்ணாகவே இருந்து வருகிறது.
இந்த 35 ஆண்டுகால இளைஞர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. விட்டேத்தியான மனோபாவத்துடன், அரசியலில் அக்கறை இல்லாமல் இருந்தார்கள். உண்மையில், அவர்களுக்குள் ஒரு அரசியல் இருந்தது. அவர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா, என்று எவரின் அரசியலும் தெரியாது. அதனால் அது பிடிக்காது.
நம்பவே முடியாத ரொம்ப அளவுக்கு அதிகமாக சித்தரிக்கப்பட்ட காமராஜர், கக்கன் பிம்பங்களைப் பேசிக்கொண்டு.... சகல அயோக்கியத்தனங்களுக்கும் தயாரானவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். அதற்கு காரணம், அவர்களை நாம், நம் வயப்படுத்த தவறிவிட்டோம். அத்தனை எளிதாக அவர்களை, நம் வயப்படுத்தவும் முடியாது.
அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டி பார்த்தோம், எவ்வளவோ பேசிப் பார்த்தோம். ஆனாலும், அவர்களுக்கு அந்த அரசியல் பாடம் புத்தியில் ஏறவில்லை. ஒரே சிறு உதாரணம் டைட்டல் பார்க்கையும் ஐ.டி பில்டையும் வளர்த்தெடுத்தோம். நமக்கு ஆப்பு வைத்ததெல்லாம் இவர்கள்தான்.
இவர்கள் 10 வயதில், பிரபாகரனின் மரணத்தையும் 2-ஜி வழக்கையும் மனதில் ஏற்றிக்கொண்டே வளர்ந்தவர்கள். அப்போது இருந்தே, நாம் சோசியல் மீடியாவில் மிகவும் வீக்காகவே இருந்திருக்கிறோம்.
மேலும் இந்த இளைஞர்களும் இளைஞிகளும் 50 வயது உட்பட்ட பெண்களும் விஜயை தங்களின் ஆதர்ச ஹீரோவாகவே பார்த்து வளர்ந்தவர்கள்.
இவர்களில் ஒரு குருப், ``பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமுடன், ப்ரியமானவளே, ஷாஜகான், யூத், வசீகரா, துள்ளாதமனமும் துள்ளும்,படம் பார்த்து வளர்ந்தவர்கள்.
இன்னொரு செட், போக்கிரி, துப்பாக்கி, மெர்சல், கத்தி, சர்க்கார், தெறி, பீஸ்ட், கோட், லியோ பார்த்து வளர்ந்தவர்கள்.
நான் 1981- இல் நடத்திய கையெழுத்துப் பிரதியிலேயே எழுதி இருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். தி.மு.க.வை மக்களிடம் எடுத்துச் சென்றார். மக்கள் தி.மு.க.வை கீழே வைத்துவிட்டு, எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டார்கள் என்று. அதுதான் எம்.ஜி.ஆர். மறைவு வரை நடந்தது.
எப்போது பார்த்தாலும் கீழ்தட்டு மக்கள் அரிதார பூச்சுகளையே நம்பி இருப்பார்கள். உண்மைக்கு அருகில், அவர்கள் வரவே மாட்டார்கள்.
எப்போதாவதுதான் தி.மு.க. ஜெயிக்கும். எப்போதுமே அ.தி.மு.க. தான் ஜெயிக்கும். 60 ஆண்டு திராவிட அரசியலில் 35 ஆண்டுகள் அவர்களுக்குத்தான் இவர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களை முட்டாள் என்று சொல்வதைவிட, அவர்களின் அறிவு உயரம் அவ்வளவுதான்.
அதனால் அவர்களின் அறிவு லெவலுக்கு இறங்கிப்போய்தான், நாம் பேச வேண்டும். அவர்கள் விரும்பும் வழியில் பேச வேண்டும்.
அதைத்தான் விஜய் செய்தார். அதில் அவர் வெற்றியும்பெற்றார்.
டிபன்ஸ் மெக்கானிசம் (தற்காப்பு முறை) அஃபென்ஸ் மெக்கானிசம் (தாக்குதல் முறை) என்று இரண்டு வித போர் முறைகளைச் சொல்லுவார்கள்.
நாம் டிபன்ஸ் மெக்கானிசத்தை கையில் எடுத்தோம். அவர் அஃபன்ஸ் மெக்கானிசத்தை கையில் எடுத்தார். தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் செய்ய வேண்டும். அவை வெறும் மீம்ஸ்களில் போஸ்ட் கார்டுகளில் மட்டுமல்ல. ஒரே யுத்ததில், இருவேறு போர் முறைகளை, இரு வேறு ஆயுதங்களைக் கையாளக்கூடாது இது போரின் விதி.
கரூரிலேயே எஃப் ஐ ஆர் போட்டு விஜயை கைது செய்து உள்ளே வைத்து ஒரு மூன்று மாதமாவது விசாரணை என்ற பெயரில், அசிங்கப்படுத்தி இருக்க வேண்டும். அதை நாம் செய்ய தவறினோம் ?
கரூர் மக்களுக்கு, இந்த உண்மை தெரிந்ததால்தான் அங்கு த.வெ.க. தோற்றது. ஆனால், அவரோ ஊர் முழுவதும் போய் நம் மீது சேற்றை வாரி பூசி விட்டுப் போய் விட்டார். மடமை உலகில் மக்கள் அதையே நம்பினார்கள் .
`காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது’ என்பார்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொல்லத் தவறியது நம்முடைய மேட்டிமைத்தனம். அதுவே இப்போது பெரிய பிரச்சினையாகி விட்டது.
வளர்த்த கிடா மூன்றாவது முறையாக கழகத்தை முட்டி கிழித்துப் போட்டு இருக்கிறது.
முதல் முறை எம்.ஜி.ஆர்.
இரண்டாவது முறை வைகோ.
மூன்றாவது முறை விஜய்.
நெருப்புப் பிடித்தது போல் அவருக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து, நாம் அசட்டையாக இருந்தோம்.
மேலும் நம்முடைய வேட்பாளர் பட்டியல் ஏக குளறுபடிகளோடு அரங்கேறியது. நம் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.
எத்தனை இடங்களை மாற்றி மாற்றி அறிவிப்பது. ஒரு எம்.எல்.ஏ. அந்த தொகுதியில், தன்னை தயார் செய்து வைத்திருந்தார் என்றால், அவரை விடுத்து, இன்னொருவரைத் தேர்வு செய்தால், அவர், அவருக்குத் தொடர்பான நெட்வொர்க் அத்தனையும் துண்டித்துப் போய்விடும். அல்லது அவர் அவற்றை வெட்டி விடுவார் என்பதை ஏன் நாம் உணரவில்லை.
சிற்றரசுக்கும் அண்ணா நகருக்கும் என்ன சம்பந்தம்? தாயகம் கவி, பரந்தாமன், தி.நகர் கருணாநிதி போன்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும் தலைநகரில் இப்படி ஏக குழப்பங்கள். மற்ற பகுதிகளின் கதை தனி.
ஒரு முறையாவது, திராவிட முன்னேற்றக் கழகம் 234 தொகுதிகளும் தனித்துப் போட்டியிடாதா என்ற பேரார்வம் எப்போதுமே கழகத் தொண்டனுக்கு உண்டு.
இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் லக்கேஜுகளை எல்லாம் எதற்காக நாம் நனைந்து சுமக்க வேண்டும்.
இவர்கள் எப்போதுமே நமக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். இந்த கோஷ்டி `மக்கள் நல கூட்டணி’ என்ற பெயரில், 2016-இல் நம்மை தோற்கடித்தவர்கள். அந்த கோஷ்டிதான் நமக்காக 2011-இல் நம் பெயரை கெடுத்து, குட்டிச்சுவர் ஆக்கியவர்கள். அவர்களைக் காப்பாற்றி, அவர்கள் வாக்கினால் வெற்றி பெறலாம் என்று நாம் நினைக்கக்கூடாது.
நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், வேஷ்டி சேலை, பிளாஸ்டிக் பக்கெட் கொடுப்பதால் என்ன பயன்? கல்யாண வீட்டில் 95 ரூபாய் வால் கிளாக் கொடுப்பதுபோல் அவற்றை வெறுத்தே விட்டார்கள்.
இன்னொரு முக்கிய காரணம், `அட்டை மாற்றப்பட்ட நம் தேர்தல் அறிக்கை’.
இந்த ஐந்து ஆண்டுகள்தான் மறுபடியும் தொடர போகிறது என்கிற பீதி, எல்லோர் மனதிலும் இருந்தது.
90 லட்சம் பேர் மகளிர் உதவித்தொகை பெறாதவர்கள், நமக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
பொதுப் பணத்தில், பொது பட்ஜெட்டில் சமூகநீதியை வளர்க்க, ஒரு குறிப்பிட்ட அளவே செலவிட வேண்டும். ஆனால், மொத்த பட்ஜெட்டிலும் பெருந்தொகையை செலவிட்டால், அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சமி தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஆறு அறிவிப்புகள் இருந்தன. அவை கிராமப்புறங்களில் மிகச்சிறப்பாக வேலை செய்தன.
பத்தாயிரம் பணம்
ஃப்ரிட்ஜ்
3) அரிசி கார்டு வைத்திருப்போருக்கு எல்லாம் 2000
4) பயிர் கடன் தள்ளுபடி
5) கல்வி கடன் தள்ளுபடி
6) ஆண்களுக்கும் பஸ்ஸில் இலவச பயணம்.
53 இடங்களை எடப்பாடி பெற்றதற்கு காரணம் இந்த அறிக்கைதான்.
ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை, எப்போதும் தேவையே இல்லை. வெறும் பத்தே பத்து கட்டளைகள் போதும்.
கிராமப்புறங்களில், பயிர் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து, நான்காண்டுகளுக்கு முன்பே 80 ஆயிரத்திலிருந்து 3 லட்சம் வரை மூன்று இடங்களில் கடன் வாங்கி வைத்திருப்பார்கள் விவசாயிகள். இவர்கள் தள்ளுபடி ஆகும் என்பதற்காகவே, பணத்தை கடன் வாங்கியவர்கள்.
இரண்டாம் உலகப்போருக்குக் காரணம், முதல் உலகப் போரின் உடன்படிக்கைதான் என்று சொல்வார்கள், அது போல 2026 தேர்தலில் தோற்றதற்கு முக்கிய காரணம் 2021 தேர்தல் அறிக்கைதான்.
தேவை இல்லாமல், அதில் நாம் கொடுத்த வாக்குறுதிகள் நமக்கு எதிராக திரும்பின. கையைக் கொடுத்தால், திமிறி தப்பி விடலாம் வாயைக் கொடுத்தால் தப்ப முடியாது.
போதாக்குறைக்கு ``உங்களுடன் ஸ்டாலின்’’, ``முதல்வரின் முகவரி’’ ``உங்கள் கனவைச் சொல்லுங்கள்’’ என்று ஒவ்வொரு முறையும் தலைப்பை மாற்றி, மக்களிடம் மனுக்கள் வாங்கியது. இது மிகப்பெரும் பேராபத்தான விஷயம். ஏனென்றால், எல்லோருக்கும் இன்று தேவை பணம், பணம் மட்டுமே.
மனதளவில் அனைவரும் கோடீஸ்வரன்தான். ஆனால் எவனிடமும் காசுதான் இல்லை. அந்தப் பணத்தை எவன் தருகிறானோ, தருகிறேன் என்று எவன் சொல்கிறானோ அவனையே கடவுளாக எண்ணுகிறான். அந்த அந்த நேரத்தில் கிடைக்கும் பணம், அது தீரும்வரையே நன்றியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பான். பிறகு அடுத்த தேவைக்கு அடுத்த தொகையைத் தேடுவான். (5,000 முன்னதாக கொடுத்தது.)
அதனால் ஏழைகளிடம் நடுத்தர வர்க்கத்திடம் மனுக்களை வாங்குவது கூடவே கூடாது. சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுக்கச் சொல்லிவிட வேண்டும்.
ஒவ்வொரு மனுவிலும் ஒரு ஏழையின் ஆன்மா ஒளிந்து இருக்கிறது என்று சொல்வார்கள். அந்த மனுக்களுக்கு நாம் உயிர் கொடுக்காத பட்சத்தில், அந்த மனுவே நமக்கு எதிராகத் திரும்பி விடும்.
எளிய மனிதர்களிடம் இருந்து, எப்போதுமே தலைவர்கள் விலகி இருக்க வேண்டும். நம் மீதுள்ள காரிஷ்மா போய் விடும்.
ஏனென்றால், அவர்களுக்கு என்ன உதவி செய்தாலும், அவர்கள் உங்களின் வாழ்க்கையைத்தான் பரிசாகக் கேட்பார்கள். நான் உன் தோழன் உன் பங்காளி, உன் வீட்டு வீட்டில் ஒருவன், என்பதை எல்லாம் அவன் நம்ப மாட்டான்.
தவிர, ``ரம்ஜானுக்கு போய் நோன்பு கஞ்சி குடிப்பது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிடுவது இதைச் செய்பவர்கள், பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் சாப்பிட வேண்டும்’’ என்ற அவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அல்லது நம்முடைய இந்துக்கள் பாசம் மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, சோசியல் மீடியாவை வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தெரிந்து விட்டது.
இவர்கள் ஒன்றும் இந்து மதத்தைத் தூக்கி காப்பாற்ற போகிறவர்கள் அல்ல. ஆனால், இவர்கள் புத்தர் வேஷம் போட்டு, சகல அயோக்கியத்தனங்களுக்கும் தயாரானவர்கள். தங்களை புனிதராக்கி கொண்டு நம்மை குறை சொல்வதற்கு, இது போன்ற மீம்ஸ்களே காரணமாயின.
சின்னவரின் பேச்சு, பாணி மாற்றப்பட வேண்டிய ஒன்று. ஒரு முறைதான் எடப்பாடி காலில் விழுந்தார். அதை ஒரு கோடிமுறை சொல்லி, நம்மை நாமே நம் மதிப்பைக் குறைத்துக் கொண்டோம்
`பத்து தோல்வி பழனிச்சாமி 10 தோல்வி பழனிச்சாமி’ என்று சொல்லவே கூடாது. ஏனென்றால் தோல்வியைக் கொண்டு, மற்றவர்களை அவமானப்படுத்தினால், நம்மை அவமானப்படுத்த பிரபஞ்சம் அடுத்த படிக்கட்டில் காத்திருக்கும்.
பைபிளில் உள்ள திருவசனத்தைச் சொல்கிறேன்.
தீர்ப்பிடாதிருங்கள், தீர்ப்பிடப்படுவீர்கள் என்று ஒரு வசனம் இருக்கிறது.
சில மூட நம்பிக்கைகள். செண்டிமெண்டுகளை நாம் பின்பற்றிவிட்டுப் போனால்தான் என்ன?
வள்ளுவர் கோட்டத்திற்குள் போகக்கூடாது, என்றால், போகாமல் இருப்பது தானே நல்லது. ஏற்கனவே அதற்கு உதாரணங்கள் இருக்கும்போது, அவற்றை நான் உடைப்பேன் என்று பேசுவது தவறு.
மதத்தையும் சாதியையும் சமமாக நடத்திச் செல்வது, நமக்கு பலன் தரும் அல்லது அது பற்றி பேசாமல் இருப்பது நமக்குப் பலன் தரும்.
எல்லா தெய்வங்களும் வேண்டாம் என்பவனும், எல்லா தெய்வங்களும் வேண்டும் என்பவனும் ஒன்றுதான். இரண்டாவதை விஜய் செய்திருக்கிறான்.
அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் சம்பளம் உயர்வதற்கு தி.மு.க. தேவை. அவர்கள் வேலை பார்க்காமல், சும்மா இருந்து சம்பளம் வாங்குவதற்கு, அண்ணா தி.மு.க. தேவை. அவர்கள் எப்போதுமே நமக்கு விசுவாசமாக இருக்கவே மாட்டார்கள். ஆளும் அரசாங்கத்தை மிரட்டியே காரியம் சாதிப்பார்கள்.
இலவசப் பயணத்தால் போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோக்காரர்கள் நமக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இலவச பஸ் என்றால் திருப்பதி மலையில் இருக்கும் ஃப்ரீ பஸ் போல முழுவதும் இலவசமாக இருக்கவேண்டும். அதில் பெண்கள் மட்டுமே பயணிக்கட்டும். காசு கொடுத்து டிக்கெட் எடுத்த ஆம்பளை பஸ்ஸின் டெரிமினஸில் இருந்து டெபோ வரை நின்று கொண்டு வருவான். பெண்கள் ஜன்னல் ஓர சீட்டாகப் பார்த்து இரண்டு பக்கம் உட்கார்ந்து கொண்டு வருவார்கள். அவர்களை எழுந்திரிக்கவும் சொல்லமுடியாது.
நான் சொல்வது எல்லாம் பொது புத்தியில் சிந்தித்து எழுதியவைதான். `பொது புத்தியில் சிந்திக்காதே’ என்றே சிலர் சொல்லி சிலர் உங்களைக் குழப்புவார்கள்.
பொது புத்தியில் ஒருத்தன் சிந்திக்கிறான் என்றால், பெரும்பான்மையை தானே அவன் சொல்லுவான். இங்கு நீங்கள் விதிவிலக்கைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. விதிவிலக்குகள் சட்டங்கள் ஆவதில்லை.
விஜய்க்கு, இளைஞர்களில் பலர் நம்முடைய கலைஞர் தந்த நுழைவுத் தேர்வு இல்லாத பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்தான் நன்றி கெட்டுப் போய் இன்று வாக்களித்து இருக்கிறார்கள்.
இந்த கேடு கெட்டவர்களுக்கு நாம் பெரிய கதவைத் திறந்து விட்டதால்தான் சென்னையில் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை மிகவும் நசிவுற்று போய்விட்டது.
விலைவாசிகள் பெரிய அளவில் உயர்வதற்கு, அரசு ஊழியர்கள்தான் காரணம் என்று 50 ஆண்டுகளுக்கு முன் சொல்வார்கள். ஏனென்றால், நமது ஆட்சியில்தான் அரசு ஊழியர்களுக்கு தாறுமாறான சம்பளம் அதிக சம்பளம் வாங்குகிறவன் சின்ன பொருளுக்கே கூடுதலாக காசைக் கொடுத்து வாங்கி செல்வான்.
விஜயை அரச கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விட்டு திட்ட விடுவதால், இனி என்ன பயன் நடந்து விடப் போகிறது. முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்க வேண்டும்.
பெருந்தன்மைக்கும் நல்லவர்களுக்குமான காலம் இதுவல்ல. இது சந்தர்ப்பவாதிகளுக்கான உலகம். `தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்’ என்று சொன்னாலே அது சந்தர்ப்பவாதம்தானே.
`பல் இருக்கிறவன் பக்கோடா தின்பான்’ என்றால் அந்தப் பல்லை உடைப்பதுதானே நம் வேலை.
எம்.ஜி.ஆருடன் விஜயை ஒப்பிடாதீர்கள் என்பார்கள். என்.டி.ராமராவ் ஒன்பதே மாதத்தில் ஆட்சிக்கு வந்தார்.
விஜய்க்கு இரண்டு ஆண்டுகள் பிடித்திருக்கிறது. அவரது முகமும் விசில் சின்னமும் போதும் என்பதை தேர்தல் சொல்லி இருக்கிறது.
`எம்.ஜி.ஆர் மதிப்பு ஒன்று மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியம்தான்’ அவர் அருகில் நிற்கும் போது, அவர்களுக்கு மதிப்பு கூடி விடுகிறது.நினைத்தே பார்க்கமுடியாதவர்கள் எல்லாம் இன்று வெற்றிபெற்று அரசவைக்குச் செல்லுகிறார்கள்.
கிறிஸ்தவர்களிடம் கிறிஸ்துவராகவும்,
மீனவர்களிடம் மீனவராகவும், மாணவர்களிடம் மாணவனாகவும் இஸ்லாமியர்களிடம் இஸ்லாமியராகவும், இந்துக்களிடம் இந்துக்களாகவும் மாறி இருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் முடிவாக, தலைவருக்கு இப்பொழுது அஷ்டம சனி அது அவமானத்தைத் தந்தே தீரும். அதை அனுபவித்து கடந்து செல்வோம். சபைக்கு தலைவர் செல்லாமல் இருப்பது நமக்குக் கிடைத்த நல் வாய்ப்பு.
சின்னவருக்கு பெரிய யோகம் இருக்கிறது. இது நமக்கு ஒருவிதத்தில் மிகவும் நல்லது. நாம் இறங்கி நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலைகளை புதிய திசையில் புதிய கோணத்தில் செயல்பட்டு, வெற்றி அடைவோம்.
நன்றி வணக்கம்
அன்புடன்,
எஸ்.கதிரேசன்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக