தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி news by sunmugasuthram press club president
தூத்துக்குடி:பெ 11 "எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மீனவ மக்களுக்கான நல் ஆட்சியாக இருந்து வருகிறது" என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.
மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்
திரேஸ்புரம், திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, பெரியதாழை, ஜீவாநகர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர். மீனவர்களின் பாதுகாப்பை கருதி கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கடல் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
திமுக அரசின் சாதனைகள்
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "மீனவ நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்து கடல் தொழில் செய்து வருகின்றனர். அவர்களது கஷ்டங்களை குறைக்கும் வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என்றார்.
மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு, மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கம், தருவைகுளம் மீன் இறங்குதளம் விரிவாக்கம் என பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எம்பிசி பட்டியல் சேர்க்கை
"மீனவ சமுதாயத்தை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன் பலனாக எம்பிசி இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன் உள்ளிட்ட பயன்களை அதிகமாக மீனவ சமுதாயத்தினர் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய அறிவிப்புகள்
ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செய்து தர முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மீன்பிடி துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் பிளான்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
"மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்த்து மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ நண்பர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
மனு வழங்கல்
தொடர்ந்து நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மீனவர் ஊர் நலக் கமிட்டியினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது பகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட வாரிய தலைவர், விரைவில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் புஷ்ராசப்னம், உத்தண்டு, மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், மாநில திமுக மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், வீரபாண்டியபட்டினம் பங்குத்தந்தை அலாசியஸ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், ஆறுமுகம், வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
photo by Arunan journalist


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக