திருச்சி, ஜனவரி 28 -
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கோதை நாச்சியார் மண்டபத்தில் இந்து சேனா மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்து சமய பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
கோவை சிரவை ஆதீனம் 4ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை ஏற்று திருவிளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
மன்னார்குடி ஶ்ரீ சம்பத்குமார இராமானுஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி தர்ஷினி அனுபவானந்த சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் தவத்திரு சுவாமி இராமானந்தா மகராஜ், இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா உள்ளிட்ட பல ஆன்மீகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கலை நிகழ்ச்சிகளும் விருது வழங்கலும்
மாநாட்டில் பாரம்பரிய பஜனை, இசைக்கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்து சமயத்தின் சேவை பணிகளை செய்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு 10 முக்கிய கோரிக்கைகள்
மாநாட்டில் இந்து சமய மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை:
• இந்து சமய கோயில்களில் பக்தர்களிடையே வேற்றுமை உருவாக்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
• இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் நலனுக்காகவும் இந்து சமய நல வாரியம் உடனே அமைக்க வேண்டும்
• இந்திய கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர், ஆன்மீக அமைப்புகளின் தலைமையில் நிர்வாகம் நடத்த சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்
• கோயில் திருவிழாக்களில் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்த வேண்டும்
• இந்து சமயம் சார்ந்த கல்வியை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்
• பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்த கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்
• சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர் மற்றும் துறவியர்களுக்கு இலவச ரயில்வே சிறப்பு பயண பாஸ் வழங்க வேண்டும்
• மடங்களின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்க வேண்டும்
• பிரசித்தி பெற்ற இந்து கோயில்களில் வரலாற்று அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும்
• கோயில்கள் சார்ந்த குளங்கள் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்
இந்த மாநாட்டை இந்து சேனா மாநில தலைவர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஆலோசனையின் பேரில் மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக