வெள்ளி, 17 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு

தூத்துக்குடி லீக்ஸ்

தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிப்பு

தூத்துக்குடி:அக் 17
வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தூத்துக்குடியில் கனமழை பெய்ததால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் பல இடங்களில் மழைநீர் தானாகவே கடலுக்கு சென்றது.

Thoothukudileaks


ஆனால் தூத்துக்குடி 3ஆம் மைல் பகுதியில் மழைநீர் தேங்கி நகர முடியாத நிலையில் இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியும், கழிவு நீர் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் , ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல், இறைச்சி கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் அமைக்காமல் மனிதக் கழிவுகளை நேரடியாக கழிவுநீர் கானில் விட்டது தெரியவந்தது. இதன் காரணமாக சுமார் 30 அடி நீளத்திற்கு கழிவுநீர் சாக்கடை அடைப்பு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா  ஆலோசனையின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சாக்கடை மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் பிளேட்டுகளை அகற்றி பார்த்தனர்.



 அப்போது மனிதக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் பாறைபோல உறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

சுமார் ஒரு லாரி அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டு, சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு, நீர் ஓட்டம் மீண்டும் சரிசெய்யப்பட்டது. 



இதற்கிடையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட அந்த தனியார் ஹோட்டலுக்கு ரூ.25,000 அபதாரம் மாநகராட்சி நிர்வாகத்தால் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் ஹோட்டல் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

“தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருமண மண்டபங்கள், பிரபல ஹோட்டல்கள் போன்றவை மனிதக் கழிவு அல்லது இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் விடக்கூடாது. இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

தூத்துக்குடி மாநகரில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வந்த நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Photo editing Arunan journalist 

News by sunmugasuthram press club president 

செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக