#தூத்துக்குடி லீக்ஸ்
செய்தி புகைப்படம் 14-4-2025
மூத்த பத்திரிகையாளர் த.சண்முகசுந்தரம்
#அம்பேத்கர் 134வது பிறந்தநாள்: அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை
தூத்துக்குடி, ஏப்ரல் 14: அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு, "ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிய, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில், ஜாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம்" என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
"சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன். சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன்" என்றும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், கலைஞர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக