வியாழன், 7 செப்டம்பர், 2023

அமைச்சர் உதயநிதிக்கு தினமலர் அறிவுரை!!!

 thoothukudileaks 7-9-2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை படிக்க நேரம் ஒதுக்கலாம்!


- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இணை ஆசிரியர், தினமலர்

அறிவுரை கூறியுள்ளார்.



அது பற்றிய செய்தியாவது:-

தமிழக விளையாட்டு துறை அமைச்சர், சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, டில்லி வரையில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று, விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக பேசினாரா என்பது தெரியாது, ஆனால், அவர் பதவியேற்பின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முரணாக பேசியுள்ளார் என்பது நிச்சயம். அப்படி பேசியது மட்டும் அல்லாமல், மீண்டும் மீண்டும் அப்படியே பேசுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.


அவருடைய பேச்சில் இருந்து, சனாதனம் பற்றியோ வரலாறு பற்றியோ அவருக்கு பெரிய புரிதல் இல்லை என்பது புலப்படுகிறது. அவருடைய சனாதன மற்றும் வரலாறு புரிதலை பார்ப்போம். 'சனாதனம் என்பதன் அர்த்தம், நிலையானது, அதாவது மாற்ற முடியாதது; யாரும் கேள்வி கேட்க முடியாதது என்பதாகும்' என்கிறார் அமைச்சர்.


சனாதனம் என்றால் தொன்மையானது என்று பொருள். நிலையானது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதை யாராலும் கேள்வி கேட்க முடியாது என்பது முற்றிலும் தவறான கருத்து. கேள்வி கேட்க முடியாத நுால் அடிப்படையிலான மதம் அல்ல சனாதனம். ஏன், சனாதனம் என்பது மதமே அல்ல.




சனாதனம் என்பது தர்மம். தர்மத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது சமயம். அதற்கும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவை மதம் மற்றும் சம்பிரதாயம். அதாவது; தர்மம் சமயம் மதம் சம்பிரதாயம் சனாதனத்தில் ஆறு சமயங்கள் உள்ளன. ஆறு சமயங்களில் நூற்றுக்கணக்கான மதங்கள் உள்ளன. அவற்றினுள் ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்கள் உள்ளன.


பெரும்பாலான மக்கள் சனாதனத்தை பழகுவதும் உணர்வதும் அவரவருக்கு பரிச்சயமான சம்பிரதாய அடிப்படையில் தான். எதனால், ஒரு சனாதனத்திற்கு இவ்வளவு கிளைகள்? அடிப்படையில், சனாதனம் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கிறது. அறிவியலுக்கு நிகராக கேள்வி கேட்கக்கூடிய ஒரே களம் சனாதனம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கான விடையை தேடி புதுப்புது மதங்களும் சம்பிரதாயங்களும் உருவெடுக்கின்றன.


இதற்கு சிறந்த உதாரணங்கள், ஆதிசங்கரர், தேவார மூவர், ராமானுஜர், பாஸவேஷ்வர், மாதவாச்சாரியார் மற்றும் வள்ளலார். இப்படி மாற்றத்தை ஏற்படுத்திய நூற்றுக்கணக்கான மகான்களின் பெயர்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.


அப்படி உருவெடுத்துள்ள மதங்களும் சம்பிரதாயங்களும் வெவ்வேறு கோட்பாடுகளோடும் பழக்கங்களோடும் இருந்தாலும் சனாதனம் சொல்லும் விஷயத்தை நெருங்குவதற்கான உத்திகளாகத்தான் அனைத்தும் அமைந்துள்ளன. ஆக, சனாதனத்தில் உள்ள பன்மை ஒன்றே அதன் வினவல் நோக்கிற்கும் சகிப்புத்தன்மைக்கும் சான்று.


'மக்களை ஜாதி ரீதியாக பிரித்து, தனித்தனியாக இருக்கச் சொன்னது தான் சனாதனம்' என்கிறார் அமைச்சர். ஜாதி என்பது இனக்குழு ரீதியான ஒரு அமைப்பு. பாரதத்தில் மாதக்கணக்கில் பனிப்பொழிவு இல்லாத சூழல், மூன்று போகம் விளைச்சல் போன்ற காரணங்களால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இனக்குழுக்கள் இங்கு குடியேறி உள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஜாதிகளாயின. இந்த குழுக்களே, இடப்பெயர்ச்சி, போர், பொருளாதார வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் மேலும் பல ஜாதிகளாக பிரிந்தன.


சனாதனத்தின் சகிப்புத் தன்மையாலும் பன்முக தன்மையாலும் ஒவ்வொரு இனக்குழுவாலும் தங்கள் அடையாளத்தை அப்படியே பராமரிக்க முடிந்தது. இதுவே உலகில் மற்ற இடங்களில் நடந்த குடியேற்றங்களையும் இடப்பெயர்ச்சிகளையும் பார்த்தோமானால், அவை, ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை முற்றிலும் அழித்து அல்லது தன்னகத்தே எடுத்துக் கொள்ளும் கதைகளாகத் தான் இருக்கும்.


பாரதத்தில் கூடிய இனக்குழுக்கள் காலப்போக்கில் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப 'உயர் ஜாதி'களாகவும், 'கீழ் ஜாதி'களாகவும் மாறி மாறி இருந்து வந்துள்ளன.


இதற்கு ஆதாரம், பாரதம், பாகிஸ்தான், பங்களாதேஷில் இஸ்லாமியருள் ஜாதிகள். அவர்கள் மத்தியில் மூன்று பிரதான பிரிவுகள் உள்ளன. அஷ்ரப் எனப்படும் அரபு தொடர்புடைய இனக்குழுக்கள், அஜ்லப் எனப்படும் மதம் மாறியவர்கள், அர்சல் எனப்படும் மதம் மாறிய ஒடுக்கப்பட்டவர்கள். இந்த மூன்று பிரிவினருள் பல்வேறு ஜாதிகள் உள்ளன.


இங்கு, கிறிஸ்தவத்திலும் ஜாதி முறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. ஏன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடைசி வரிசையில் இடம் அல்லது தனி சர்ச் என்ற அளவிற்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆக, பல்வேறு ஜாதியினர் சனாதனத்தை கடைபிடிக்கிறார்களே ஒழிய சனாதனம் ஜாதிகளை உருவாக்கவில்லை. இது சற்றே வரலாற்றை படித்திருந்தால் தெரியக்கூடிய விஷயம் தான்.


'கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன் கட்டை ஏறவைத்தது, கைம் பெண்களுக்கு மொட்டை போட்டு, வெள்ளை புடவை கட்ட வைத்தது, குழந்தை திருமணங்கள் நடத்தி வைத்தது போன்றவற்றை சனாதனம் செய்தது' என்கிறார் அமைச்சர்.


கணவனை இழந்த அனைத்து பெண்களையும் நெருப்பில் தள்ளி இருந்தார்களானால் யாருக்குமே பாட்டி இருந்திருக்கமாட்டார்கள். பேசும் முன் சற்றாவது சிந்தியுங்களேன்! அதே வரியில், மொட்டை போட்டு... என்று சொல்கிறார். ஏற்கனவே நெருப்பில் தள்ளிவிட்டு ஆகிவிட்டதே, யாருக்கு மொட்டை போடுவார்கள்?


இவர் கூறும் பழக்கம் எல்லாம் ஒரு சில சமூகங்களில் ஒரு குறுகிய காலகட்டத்தில் அந்தந்த சமூகத்தின் பழக்கமாக இருந்தது. எந்த ஒரு சனாதன ஆன்மிக பெரியவரோ, கோட்பாடோ இவ்வாறு எல்லாம் செய்யச்சொல்லவில்லை.


ஐரோப்பாவில் 'விச் ஹன்ட்' எனப்படும் சூனியக்காரி என பட்டம் சூட்டப்பட்டவர்களை கொல்வதை 16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சர்ச் மேற்கொண்டது. அதில் 40 ஆயிரம் பெண்கள் உயிரோடு கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், கிறிஸ்தவம் பெண்களை உயிருடன் எரிப்பதை ஊக்கவித்தது என்று அமைச்சரால் சொல்ல முடியுமா?


சனாதனத்தை குற்றம் சொல்லலாம் தவறில்லை. சனாதனத்தின் கிளைகள் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்கி வளரக்கூடியவை. ஆனால், அதற்கு சனாதனத்தை பற்றியும் வரலாறை பற்றியும் நன்கு படித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் சாட்டப்படும் குற்றங்கள் இதுபோல அரைவேக்காடாக தான் இருக்கும்.


தான் ஒரு கிறிஸ்தவர் என்று கடந்த டிசம்பரில் அறிவித்த அமைச்சர், மற்ற நம்பிக்கைகளை மதிக்க தெரிந்துகொள்ள வேண்டும். அதுவே ஆட்சியாளருக்கு தகுந்த குணம். தற்போது சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியுள்ள இவர், ஒருதலைபட்சமாக, தன் மதத்தினர் சார்பாகவோ ஹிந்துக்களுக்கு எதிராகவோ முஸ்லிம்களுக்கு எதிராகவோ செயல்படமாட்டார் என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது?

என்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக