திங்கள், 20 செப்டம்பர், 2021

தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றுவதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த குற்றங்களுக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும், CBI வமுள்ள வழக்கை CBCID க்கு மாற்றி சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் தூத்துக்குடி மக்கள் சார்பில்ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை!! .

press news


தூத்துக்குடியை நாசப்படுத்தி வந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்கள் எதிர்த்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-05-2018 மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை கார்ப்பரேட்டின் கூலிப்படையாக மாறி கடந்த அதிமுக அரசு சுட்டுக்கொன்றது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கடுங்கண்டனம் எழுந்த நிலையில் வேறு வழியின்றி 29-05-2018 அன்று கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

ஆனால் அரசாணை செல்லாது எனவும், மீண்டும் ஆலையை திறக்கவும் வேதாந்தா நிறுவனம் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. உயர்நீதிமன்றமானது "தமிழக அரசின் அரசாணை செல்லும், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்ககூடாது" என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிலுவையில் உள்ளது.

 கடந்த 25 ஆண்டுகளாக தமிழக அரசு ஸ்டெர்லைட் பாதிப்பால் ஆலையை மூடுவதும், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும், மீண்டும் திறப்பதுமாக நாடகம் நடந்து வருவது தூத்துக்குடி மக்களுக்கு கவலையையும், வருத்தத்தையும் அடையச் செய்துள்ளது.

இதனை உணர்ந்துதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "திமுக அரசு அமைந்தவுடன் அரசு கொள்கை முடிவெடுத்து, சிறப்பு சட்டமியற்றி, ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியில் இருந்து நிரந்தரமாக அகற்றப்படும்" என்று தேர்தல் பிரச்சாரங்களிலும், தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்திருந்தார்.

தூத்துக்குடி மக்களும், மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பல முறை கோரிக்கை வைத்தோம். கடந்த முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் சிறப்பு சட்டம் குறித்தும், ஸ்டெர்லைட்டை அகற்றுவது குறித்தும் வெளியாகாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம்.

மேற்கண்டவாறு உச்சநீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த விதிமீறல்கள் மற்றும் மாசுபடுத்துதல் குற்றங்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட FIR கள், பல 100 கோடி சொத்துக்கள் சேதம் உள்ளிட்டு தூத்துக்குடியின் பொது அமைதியை சிதைத்து வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு - 133-ன் கீழ் அகற்றுவதற்கான அதிகாரம் மாவட்டாட்சியருக்கு உள்ளது. இந்த அதிகாரத்தையும் இன்று வரை தமிழக அரசு பயன்படுத்தவில்லை.

மிகவும் குறிப்பாக மக்களை படுகொலை செய்த காவல்துறை குற்றவாளிகள் இன்றுவரை சுதந்திரமாக வெளியில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.


 எனவே தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றுவதுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த குற்றங்களுக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்குகுமாறும், CBI வமுள்ள வழக்கை CBCID க்கு மாற்றி சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் தூத்துக்குடி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்ற வழக்கு ஒரு போதும் தடையாக இருக்கவில்லை.

எனவே தந்தை பெரியார் வழியில் தமிழக அரசு செயல்படுவதாக தமிழக முதல்வர் குறிப்பிடுவதால், சமூகநீதிக் காவலர் பெரியார் பிறந்த நாளான செப்-17 - அன்று தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச்சிலையிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கு மனு கொடுக்கிறோம்.

இந் நிகழ்ச்சியின் மூலம் தமிழக முதல்வர் தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலிப்பார் என்று நம்புகிறோம். திமுக அரசு உறுதிமொழியாக கொடுத்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று இதன் மூலம் நாங்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பிற்காக 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு 
எண். 50- B போல்டன் புரம், திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி- 628 003
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக