Tamil Nadu updates
Photo news by sunmugasuthram Reporter
தூத்துக்குடியில் ஒப்பந்தக்காரரை தாக்க முயற்சி – 5 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி, பிப். 14:
தூத்துக்குடியில் ஒரு தனியார் ஒப்பந்தக்காரரை தாக்க முயற்சி செய்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பால விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஆவுடையார்புரத்தில், மைக்கேல் அருள் ரீகன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடத்தில், கல் தூண்கள் ஊன்றி கம்பி வேலி அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்த வேலையை ஒப்பந்தக்காரர் கணேசமூர்த்தி கடந்த நான்கு மாதங்களாக செய்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு, கணேசமூர்த்தி தனது பணியாளர்களுடன் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் வசிக்கும் சாந்தி, அன்பு, விஜி, அகஸ்டா, ஆண்டாள் ஆகிய 5 பேர் அவருடன் தகராறு செய்தனர்.
அவர்கள், அந்த இடத்தில் வேலி அமைக்கக்கூடாது என கூறி, மைக்கேல் அருள் ரீகனின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், குறித்த 5 பேரும் ஒப்பந்தக்காரர் கணேசமூர்த்தியை அவதூறான வார்த்தைகளால் பேசி, கல் தூண்களை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார், புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் பின்னர், சம்பந்தப்பட்ட 5 பேரும் 173 பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக