▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
5-8-2024 arunan journalist
நீங்க.... இனிமேல் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம்! ஆன்லைனில் புகார் தரலாம்! புதிய குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சங்கள்
2024 ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் ஜீரோ எப்ஐஆர், ஆன்லைன் போலீஸ் புகார்களைப் பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன் அனுப்புதல் மற்றும் கொடூரமான குற்றங்கள் நடந்த இடங்களைக் கட்டாயமாக வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட விதிகள் உள்ளன.
இப்போது.... நடைமுறைக்கு வந்துள்ள பாரதீய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் 2023 ஆகியவை எளிய இந்திய மக்களுக்கும் கூட அதிகாரம் அளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்த மூன்று சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.
இவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷ் கால இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் புகார்!!!
இதில் புதிய சட்டங்களின் கீழ் ஒருவர் ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்க முடியும். பழைய சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் அளிக்க நேரடியாக போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆனால், புதிய சட்டத்தின் கீழ் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.
இது பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகும் புகாரளிக்க வழிவகை செய்கிறது.
இதன் மூலம் போலீசாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது.
ஜீரோ எஃப்ஐஆர்!!!
அதேபோல ஜீரோ எஃப்ஐஆர் என்ற நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அதாவது பழைய சட்டங்களின் கீழ் குற்றம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய வரம்பிற்குள் வருகிறதோ..? அந்த குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும்.
இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த பிரச்சினையும் புது சட்டத்தில் இருக்காது.
குற்றம் நடந்து இடம் எதுவாக இருந்தாலும் எந்த போலீஸ் நிலையத்தில் வேண்டும் என்றாலும் புகார் அளிப்பதை இந்த ஜீரோ எஃப்ஐஆர் வழிவகை செய்கிறது.
இது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதில் உள்ள தாமதங்களை நீக்குகிறது.
புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் எஃப்ஐஆர் காப்பி இலவசமாக வழங்கப்படும்.
கைது விவரம் ???
அதேபோல ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் கூறும் நபருக்குக் கைது குறித்து போலீசார் கூற வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.
இதன் மூலம் கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்குக் கைது குறித்து உடனடியாக தெரிய வரும்.
இது கைது செய்யப்பட்ட நபருக்கும் கிடைக்க வேண்டிய நியாயத்தைப் பெற்றுத் தரும்.
மேலும், கைது விவரங்கள் இப்போது காவல் நிலையங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் வைக்கப்படும்.
இதுவும் கைது குறித்த தகவல்கள் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள உதவும்.
வீடியோ எடுப்பது !!!
அடுத்து.... விசாரணையை வலுப்படுத்த முக்கியமான விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது கடுமையான குற்றங்கள் நடந்த இடங்களுக்கு தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் நடந்த இடத்தை கட்டாயமாக வீடியோ படம் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விதிகளும் வலிமையான விசாரணையை உறுதி செய்யும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்???
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் இருக்கிறது.
மேலும் புகார் அளித்து இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வாக்குமூலம் பெற வேண்டும்..
90 நாட்களுக்குள் வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களைப் பாதிக்கப்பட்ட நபருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதையும் புதிய சட்டங்கள் கட்டாயமாக்குகிறது.
பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும்.
பெண் மாஜிஸ்திரேட் இல்லாதபட்சத்தில் ஒரு ஆண் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளிக்கலாம்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அருகே மற்றொரு பெண் இருப்பதைச் சட்டம் அனுமதிக்கிறது.
மேலும், புதிய சட்டங்களின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச முதலுதவி அல்லது மருத்துவச் சிகிச்சைக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
டிஜிட்டல் சம்மன்!!!
சம்மன்கள் இப்போது டிஜிட்டல் முறையில் அனுப்புவதையும் சட்டம் அனுமதிக்கிறது.
இது சட்ட செயல்முறைகளை விரைவுபடுத்தவும், தேவையில்லாத பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும்.
14 நாட்கள்!!!
குற்றஞ்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் என இரு தரப்பினருக்கும் 14 நாட்களுக்குள் எப்ஐஆர், போலீஸ் அறிக்கை, குற்றப்பத்திரிகை, அறிக்கைகள், வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உள்ளது.
வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும், நீதி தக்க சமயத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு வாய்தாக்களை மட்டுமே வழங்கலாம் என்ற விதி இருக்கிறது.
சாட்சியங்களையும் பாதுகாக்கத் தனித் திட்டங்களை உருவாக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக