thoothukudileaks 24-4-2023
பாரதிய ஜனதா கட்சியின் மறு உருவமாக திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றியுள்ள தொழிலாளர் விரோத சட்டதிருத்த மசோதாவால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம்.கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றிய செய்தியாவது:-
பெரும் முதலாளிகளின் ஆணவம் மற்றும் அடக்கு முறையில் "18 மணி நேரம் வேலை"என்று வைத்திருந்த பணி முறையை தகர்த்தெறிந்து,....
"எட்டு மணி நேரம் வேலை,
எட்டு மணி நேரம் ஓய்வு,
எட்டு மணி நேரம் உறக்கம்"என்பதை கொண்டு வர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒன்று இணைந்து பெரும் புரட்சி செய்து, கடும் போராட்டம் செய்கு பெற்ற உரிமை தினத்தை நினைவு கூறும் உழைப்பாளர்களின் உரிமை தினமான "மே தினம்" இன்னும் சில நாட்களில் வரவிருக்கின்ற சூழ் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் "தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தம்" ( வாரத்தின் 7 நாட்களில் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை, 3 நாட்கள் விடுமுறை) என்கிற புதிய தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தாக்கல் செய்து அதனை நிறைவேற்றி இருப்பதன் மூலம் மாநில அரசு மத்திய அரசின் மறு உருவமாகவே செயல்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளே இல்லாத சூழலில் 44 தொழிலாளர் நல சட்டங்களை ரத்து செய்து அதனை கார்ப்பரேட், மற்றும் பெரும் முதலாளி வர்க்கத்தினருக்கும் சாதகமான 4 சட்டங்களாக மாற்றி மக்கள் விரோத பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதனை அமுல்படுத்த மறுத்தன.
அப்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகமும், அதன் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களும் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆனால் தற்போது அதே சட்டத்தை சட்டமன்றத்தில் தங்களின் கூட்டணி கட்சியினரிடம் கூட கலந்தாலோசிக்காமல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வழியில் தொழிலாளர்களுக்கு துரோகம் விளைவித்தது மிகவும் கண்டனத்திற்குரியது.
தொழிலாளர்கள் பணி செய்கின்ற தொழில் நிறுவனங்களில் தங்களின் சுய விருப்பதின் பேரில் மட்டுமே 12 மணி நேரம் வேலை சட்டம் நடைமுறை படுத்தப்படும், இச்சட்டத்தின் மூலம் எல்லா தொழிலாளர்களுக்கும் 12 மணி நேரம் வேலை என்கிற கட்டாயம் கிடையாது, அதனால் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் கூறியிருப்பது 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய நகைச்சுவை ஆகும்.
அதுமட்டுமின்றி பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பெரும் தொழிற்சாலை களிலும் எந்த ஒரு தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களின் நலனிற்காக முழுமையான சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் நிலவி வரும் நிலையில் இறுதி நம்பிக்கையாக அரசையும், ஆட்சி செய்பவர்களையும் நம்பிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மே தினப் பரிசாக 8 மணி நேரம் வேலை என்கிற சட்டத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை என்கிற தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி, மிகப்பெரிய இடியை தொழிலாளர்களின் தலையில் திமுக அரசு போட்டு இருப்பது சிறிதும் மன்னிக்க முடியாதது.
ஆனால் தமிழகத்தில் பாஜகவிற்கு பரம எதிரி போல காட்டிக் கொண்டு ஆட்சியை பிடித்த திமுக தற்போது மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களில் ஒன்றான
12 மணி நேரம் வேலை சட்டத்திற்கான சட்டதிருத்த மசோதாவை தமிழகத்தில் அமுல்படுத்த சட்டப்பேரவையில் அதற்கான மசோதாவை நிறைவேற்றி, மாநில அரசின் தொழிலாளர் நல சட்டங்களை குழித்தோண்டி சவக்குழியில் புதைத்தது போல் செயல்பட்டிருப்பதன் மூலம் "எதிர்க்கட்சியாக இருந்த போது எதிரிக்கட்சி" போல் செயல்பட்டு விட்டு ஆளுங்கட்சியான பிறகு மத்திய பாஜக அரசிடம் மாநில திமுக அரசு சாஸ்தாங்கமாக சரண் அடைந்து விட்டது என்று நிருபிக்கப் பட்டுள்ளது.
8 மணி நேரம் வேலை என்கிற சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே பல்வேறு தொழில், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களை தற்போதும் கூட 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை வேலை வாங்கி, அதற்கான ஊதியத்தை கூட அவர்களுக்கு வழங்காத நிலையே நீடித்து வரும் போது தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள புதிய தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவானது, ஏற்கனவே உழைப்புச் சுரண்டலை சத்தமின்றி செய்து வரும் முதலாளிளுக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக அமைந்து, குறைந்த தொழிலாளர்களை பணிக்கு வைத்துக் கொண்டு அவர்களை இன்னும் சக்கையாக கசக்கிப் பிழிந்து, உழைப்பைச் சுரண்டி, வேலையில்லா திண்டாட்டம் உருவாகவே வழி வகுக்கும்.
குறிப்பாக 8 மணி நேரம் வேலை எனும் போது மூன்று முறைகளில் (ஷிப்டுகளில்) பணியாற்றுகின்ற தொழிலாளர்களை 12 மணி நேர வேலை சீர்திருத்தம் அடிப்படையில் இரண்டு முறைகளாக (ஷிப்டாக) மாற்றப்படும், அதன் மூலம் மூன்றாவது ஷிப்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகும். அத்துடன் இரண்டு ஷிப்டுகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும், இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த புதிய வேலை நேர சீர்திருத்த சட்ட மசோதாவால் முதலாளிகள் வர்க்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டுமே கூடுதல் ஆதாயம் அடைவார்கள் என்பதால் போராடிப் பெற்ற 8 மணி நேரம் வேலை என்கிற தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற இப்புதிய சட்டமானது தமிழகத்திற்கு தேவையில்லை.
எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் நடைமுறை படுத்தாமல் மாநில அரசின் தொழிலாளர் நல சட்டங்களையே தொடர்ந்து அமுலில் இருக்கவும், அதனை உறுதி செய்திடவும் தமிழக அரசு ஆவண செய்வதோடு, தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள 12மணி நேரம் வேலை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற்று, தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவண் :
மக்கள் சிவில் உரிமை கழகம்
தூத்துக்குடி மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக