ஆணாக மாறிய தோழியிடம் இருந்து பிரித்ததால் பெண் போலீஸ் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்
ஆணாக மாறிய தோழியிடம் இருந்து குடும்பத்தினர் பிரித்ததால் தூத்துக்குடி ஆயுதப்படை பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி ஸ்பிக்நகரை சேர்ந்தவர் ஹரிப்பிரியா(28), தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேம்பாரை சேர்ந்த அந்தோணி ஜெனிட் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டாராம்.
அந்தோணிஜெனிட்டிற்கும் இது 2வது திருமணம் ஆகும்.
அதன் பிறகு அவர்கள் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த பெண் கமாண்டோ பயிற்சி முகாமில் பங்கேற்ற ஹரிப்பிரியாவுக்கும், மற்றொரு பெண் காவலரான நவநீத பிரியா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் நவநீதப்பிரியா பெண்ணாக இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர்.
இதன் காரணமாக ஹரிப்பிரியாவிற்கும் நவநீத பிரியாவிற்கும் தன் பாலின சேர்க்கை பழக்கம் உருவாகி உள்ளது.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹரிப்பிரியா விடுமுறை எடுத்துக்கொண்டு தனது கணவரிடம் சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், கணவர் அந்தோணி ஜெனிட் ஹரிப்பிரியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, அவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
அப்போது, ஹரிப்பிரியா தனது கணவரிடம் கோவில்பட்டியில் இருப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்தோணி ஜெனிட், ஹரிப்பிரியாவின் குடும்பத்தினருடன் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் காவல்நிலையத்தில் ஹரிப்பிரியாவை காணவில்லை என்று புகார் அளித்து தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டதில் அவர் புதுச்சேரியில் தனது தோழியான நவநீதப்பிரியாவுடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புதுச்சேரி அருகே திண்டிவனத்தில் ஒரு தனியார் பஸ்சில் இருவரும் இருந்தபோது நவநீதப்பிரியாவிடமிருந்து, ஹரிப்பிரியாவை கணவர் அந்தோணி ஜெனிட் மற்றும் உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி ஆயுதப்படை குடியிருப்பிற்கு கடந்த 22ம் தேதி அழைத்து வந்துள்ளனர்.
வரும் வழியில் தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே உள்ள கசங்காத்த பெருமாள் கோயிலில் வழிபட்டுவிட்டு வரும்போது ஹரிப்பிரியா குடும்பத்தினரின் பிடியிலிருந்து தப்பி லாரியில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அவரை மீட்டு குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் அந்தோணி ஜெனிட் உள்ளறையில் படுத்திருந்தபோது, வெளியே உள்ள அறையில் ஹரிப்பிரியா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து அங்கு வந்த தென்பாகம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆணாக மாறிய தோழியிடம் இருந்து தன்னை பிரித்ததால் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக