thoothukudileaks 13-10-2023
தூத்துக்குடியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய டூவீலர் சைலன்சர்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய இருசக்கர வாகனங்களில் உள்ள சைலன்சர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இருச்சக்கர வாகனங்களில் விதிகளை மீறி மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பலர் பொருத்தி இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனால் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி இருச்சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள்மற்றும் போலீசார் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
காலை 8 மணி முதல் மாலை வரை திரேஸ்புரம் சந்திப்பு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, 4-ம் கேட், எப்.சி.ஐ ரவுண்டானா, காமராஜ் கல்லூரி சந்திப்பு உள்பட 11 இடங்களில் திடீர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்த 47 இருசக்கர வாகனங்களில் இருந்த சைலன்சர்கள் அகற்றப்பட்டன.
அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் அந்த இருசக்கர வாகனங்கள் வாங்கும் போது பொருத்தப்பட்டு இருந்த ஒரிஜினல் சைலன்சர்களை பொருத்தி வாகனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மே மாதமும் இது போன்று 37 சைலன்சர்கள் அகற்றப்பட்டன. இந்த சைலன்சர்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சர்கள் உள்பட அனைத்து சைலன்சர்களையும் ரோடுரோலர் கொண்டு நசுக்கி அழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக