புதன், 24 மார்ச், 2021

தூத்துக்குடி மாவட்டத்தில்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்குமாறு தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் வலியுறுத்தல்!!! தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 103 வழக்குகள் பதிவு!!!

 தூத்துக்குடி லீக்ஸ்: 24.03.2021



வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்திட ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 06.04.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 26.02.2021 அன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டி  முன்னெச்சரிக்கையாக வரலாற்றுப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 1523 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று உரிமம் பெற்ற 536 துப்பாக்கிகளில் விலக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கிகள் 84 தவிர அனைத்து துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 44 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடும்போது ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் அடங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொது இடம், சுவற்றில் கட்சி சார்பாக படம் மற்றும் கட்சி கொடி வரைந்த கட்சி நிர்வாகிகள் மீது இதுவரை Tamilnadu Open Places (Prevention of Disfigurment) Act 1959 சட்டத்தின்படி 61 வழக்குகளும், தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 42 இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் என மொத்தம் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆதலால் மக்கள் அதிகம் கூடுமிடங்களை தவிர்க்கவேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.  ஆகவே பொதுமக்கள் கொரோனா தொற்று நோய் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


யாரும் தனக்கோ, தன் கட்சியினருக்கோ வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பதும், பொதுமக்கள் வாக்களிக்க பணமோ, பொருளோ வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும். 

நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்குமாறும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்திட  ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  கேட்டுக்கொண்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக