Thoothukudileaks 25-11-2023
நமது முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களுக்காக உழைக்கிறார் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
இதுபற்றி செய்தியாவது:-
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பேச்சியம்மாள் வரவேற்புரையாற்றினார்.
பல்வேறு நிறுவனங்களில் தேர்ச்சிப் பெற்ற 27 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினர் .
அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது...
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க, நமது மாவட்டத்தில் நடைபெறுகிறது.
பல்வேறு தொழில்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குகிறது .
சிலர் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருப்பார்கள். அவர்களிடத்தில் திறன் குறைவாக காணப்படும். அதை போக்கும் விதமாக அரசின் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது.
நிறுவனத்திற்கு ஏற்றாற்போல் நமது பணியும் அமைய வேண்டும். திறமையை வளர்த்துக் கொண்டால், வேலை தேடி வரும். இங்கு இளைஞர்கள், மாணவிகள் அதிகளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இங்கு இருவிதமான தேர்ச்சிகளுக்கு வழிவகை செய்கிறது.
வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும், நீங்கள் தொழில் முனைவோராக ஆக விரும்பினால் அதற்கும் தொழில்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோராக மாறும் பட்சத்தில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். பலருக்கு வேலைவாய்ப்பை நீங்கள் வழங்கலாம். நீங்கள் என்ன எதிர்பார்ப்பை நினைக்கிறீர்களோ அதை பூர்த்தி செய்யும் வகையில், தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் தொடர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களுக்காக உழைக்கிறார் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
இந்த சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அரசு துறை சார்ந்த வழிகாட்டு நெறிமுறை ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், 100க்கும் மேற்கண்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கினர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, தாங்கள் விரும்பிய நிறுவன ஸ்டால்களில் பயோடேட்டா வழங்கினர்.
பலருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியில் சென்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தாட்கோ பொதுமேலாளர் சொர்ணலதா, திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் சண்முகசுந்தர், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மற்றும் அல்பட், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக