வியாழன், 18 மார்ச், 2021

தமிழகத்தில் இனியாவது? முன்னணிஅரசியல் கட்சிகளுக்கு இதை செயல் படுத்த தெம்பு இருக்குமா??

 சரோஜினி மகிஷி அறிக்கையும் 100% கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பும்!! 

இக்கட்டுரையை முழுசா படியுங்க ....தோழமைகளே!!!



கர்நாடக மாநிலம் தார்வாடில் பிறந்து 4 முறை தார்வாட் வடக்கு தொகுதி மக்களவை தேர்தலில் வென்று, ஒருமுறை மாநிலங்கள் அவையில் தேர்ந்தெடுக்கபட்டு மந்திரியாக இருந்தவர் தான் சரோஜினி மகிஷி. 1983 இல் இவரது தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட ஒரு குழு மத்திய மாநில அரசுகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கியது. இந்த பரிந்துரைகள் 1986 ஆம் ஆண்டு முழு வடிவில் கொண்டுவரப்பட்டு அதில் பல பரிந்துரைகள் கர்நாடக அரசால் சட்டமாக கொண்டு வரப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. 


இந்த குழு பரிந்துரைத்தவற்றில் முக்கியமானவைகளை பார்ப்போம். 


1. 100% இடஒதுக்கீடு கர்நாடக மாநில அரசு பணிகளில் கன்னடர்களுக்கே வழங்கப்பட வேண்டும். 


2. 100% இடஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் "C", "D" எனும் ப்ளூ காலர் பணிகள் கன்னட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 


3. மத்திய அரசின் "B" கிரேட் பணிகளில்  80% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும். 


4. மத்திய அரசின் "A" கிரேட் பணிகளில் 65% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும். 


5. 100% தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை. அப்படி கன்னடர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனும் நிலையில் பிறருக்கு வழங்கலாம். 


6. மகாராஷ்டிர மாநிலத்தை போன்றே கர்நாடகத்தில் பணியில் உள்ள கன்னடர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியில் உள்ளவர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தேர்ந்தெடுக்க படுகிறார்களா? என்பதை ஆண்டுக்கு ஒருமுறை தெரிவிக்க வேண்டும். 


7. தனியார் பணிகளில் தேர்ந்தெடுக்கும் போது மாநில அரசு ஒரு குழுவை அனுப்பி பணி நியமன முறைகளை பரிசோதிக்க வேண்டும். 


இதே போல் 58 பரிந்துரைகளை 1986 இல் சரோஜினி மகிஷி குழு அறிக்கை சமர்பிக்க அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டு அதில் 46 பரிந்துரைகளை சட்டமாக்குகிறது. ஏன் சிலவற்றை ஏற்கவில்லை என பார்த்தால் தனியார் நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால் அந்த பரிந்துரைகளில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு பணிகளில் சொன்ன பரிந்துரைகள் மட்டும் சட்டமாக்கபட்டது. மற்றவை 1991 இல் Economic liberation நடந்த பின் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் தனியார் துறையிலும் 100% வேலைவாய்ப்பு கேட்டு சமீபத்தில் டிவிட்டரில் ஒரு போராட்டம் நடந்தது. பல கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கடந்த ஆட்சியில் சித்தராமையா இதை நிறைவேற்றுவேன் என உறுதி கூறியும் இருந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் கண்டது. 


இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் யார் கன்னடர்? அதை எப்படி கண்டுபிடித்து இடஒதுக்கீடு தருவார்கள் என்பதே? இது தமிழகத்திலும் கூட பலரால் கேட்கப்படும் ஒன்று. 


அதையும் சரோஜினி மகிஷி தனது அறிக்கையில் சொல்கிறார். 


"15 ஆண்டுகளுக்கு குறையாமல் விண்ணப்பதாரர் கர்நாடகத்தில் இருந்திருக்க வேண்டும். கன்னடம் பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். அதிலும் கன்னட மீடியத்தில் படித்திருந்தால் முன்னுரிமை" ( Voter id,ration card, School & college certificate, residential certificate important) . அதாவது கர்நாடகத்தில் 15ஆண்டுகளுக்கு குறையாமல் வாழ்ந்திருந்தால், கன்னடம் எழுத, படிக்க தெரிந்திருந்தால், கன்னட வழி கல்வியை பள்ளி/கல்லூரிகளில் பயின்றிருந்தால் அவர் கன்னடர். இங்கு சாதிவழி கன்னடம் சட்டப்படி நிலைநாட்டப்படவில்லை. மொழிவழி மாநிலம் பிரித்தது சட்டப்படியானது எனில் இதுவும் அப்படியே!


இதில் அவர் வைத்த இன்னொரு ட்விஸ்ட் மிக முக்கியமானது. அது "கல்லூரிகளில் டெக்னிகல் படிப்பிற்கு பிற மாநில மாணவர்களை 5% மேல் சேர்க்க கூடாது" என்பதே. இதனால் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் கர்நாடகத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக சேர்க்கப்படுவார்கள். ஏற்கனவே கர்நாடகத்தில் மும்மொழி கல்வி நடைமுறையில் இருப்பதால் கன்னடத்தை எழுதவும், படிக்கவும் அவர்கள் பள்ளி காலங்களிலே அறிந்திருக்க வேண்டும். இதனால் மொழிவாரி முன்னுரிமை இங்கு சாத்தியப்படுகிறது. 


மாநில பணிகளில் "C" , "D" கிரேட் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளி படிப்பை கர்நாடக மாநிலத்தில் படித்திருக்க வேண்டும். இதற்கு பள்ளி சான்றிதழ்களும், இருப்பிட சான்றிதழும், ரேஷன் அட்டையும் போதுமானதாக இருக்கும். 


இப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்தில் ஒரு தீர்க்கமான அறிக்கையை வடிவமைத்து அதனை மாநில அரசு அமல்படுத்தியும் இருப்பது கவனிக்கத்தக்கது. 


ஆனால் தமிழகத்தின் நிலையென்ன? 


 தமிழ்நாடு அரசு பணிகளுக்கான தேர்வில் கூட மொழிபெயர்க்க கடினமாக உள்ளது என ஆங்கிலத்தில் தேர்வு எழுத TNPSC பரிந்துரை செய்தது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக வாபஸ் பெற்றது. 


UPSC தேர்வில் தமிழை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க முட்டுக்கட்டை போட்டது. அதுவும் எதிர்ப்பின் காரணமாக வாபஸ் வாங்கபெற்றது. 


'தமிழ்நாடு வேலை தமிழருக்கே' என கேட்டால் 'யார் தமிழர்?' என எப்படி கண்டுபிடிப்பீர்கள் என நக்கலடிக்க வேண்டியது. மரபணு டெஸ்ட் எடுத்து சாதியை ஆராய வேண்டியது என தமிழ் சமூகம் அறிவுக்கு ஒவ்வாத செயல்களை எல்லாம் செய்து வருவது வருத்தத்துக்குரிய செயல். 


மொழி,சாதி, இனம், மதம், பாலினம் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் article 15 இன் படி குற்றம் என பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஆனால் இதே இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா வரை மொழி வழி இட ஒதுக்கீடு தரும்போதும், இதே மொழி வழி மாநிலங்களை இந்திய ஒன்றிய அரசே வழங்கியபோதும் இந்த சட்டம் செல்லாமல் போனது வியப்புக்குரியது.  


இந்தியாவில் ஒருகாலத்தில் 50% மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது என்பது சட்டமாகவே இருந்தது. அதை தமிழக அரசு முதன்முதலாக உடைத்து காட்டி, சாதிவாரி இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்து சட்டப்போராட்டம் நடத்தி இன்று 69% இட ஒதுக்கீட்டை பெற்று தந்துள்ளது. இது மாநில அரசின் முயற்சி தானே! அதையே செய்து காட்டிய அரசானது ஏற்கனவே அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானம், மராத்தியம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் ஒரு விடயத்தை இங்கு அமல்படுத்துவதில் எந்த பெரிய சட்ட சிக்கலும் இல்லையே! 


#தற்போது

வாட்ஸ அப் - ல் வைரலாக வெளிவந்து கொண்டிருக்கும் பரபரப்பு  பதிவு இது TamilnaduJobsForTamils



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக